புதன், 29 ஆகஸ்ட், 2012

வாசிப்பனுபவம் 

ஒரு துளி துயரம் (சு. வேணுகோபால்)


சு.வேணுகோபால் பற்றி நான் முதலில் அறிந்தது ஜெயமோகனின் ஏழாம் உலகிற்கு அவர் எழுதிய அணிந்துரை  மூலமாக. அதை வாசித்த போது வேணுகோபால் மீது ஒரு பிரியம் ஏற்பட்டது . அவரது இந்த ஒரு துளி துயரம் சிறுகதை தொகுப்பினை வாசிக்க இப்போது அவர் எனக்கு மிக பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவராக மாறிவிட்டார்.
        பதினான்கு சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பில் உள்ளஒவ்வொரு கதையும் நிறைவான வாசிப்பனுபவத்தை அளிக்கின்றன .நாம் அன்றாடம் காணும் சாதாரண எளிய மனிதர்கள்தான் இவரது கதை நாயகர்கள், இன்றைய அவசர உலகில் பொது  பார்வையில் எந்த ஈர்ப்பும் இல்லாத கவனிக்க படாதவர்களாக இருக்கும் இவர்கள் மீது இந்நூல் வெளிச்சம் பாய்ச்சுகிறது.இந்நூல் நம் சிறுவர்களை, துணையை, பெரியவர்களை நின்று கவனிக்க செய்து அவர்களுக்கான மதிப்பினை அளிக்க நம் மனதினை  மாற்றுகிறது.
         இவர் கதையில் வரும் சிறுவர்சிறுமிகளின் உலகம் நம்மையும் அவர்களோடு அலையும் சிறுவர்களாக மாற்றி விடுகிறது. எவ்வளவு அற்புதமான குழந்தைகள், தன் அம்மாவிற்கு தெரியாமல் தன் ஊருக்கு வரும் தாத்தாவிற்கு உணவு கொண்டு வரும் சிறுமி, தன் தந்தை தன் ஹாஸ்டலில் காண வரும் போது அப்பாவின் கசங்கிய சட்டையினை கண்டு நான் வேலைக்கு போனதும்  உனக்கு சட்டை வாங்கித்தருகிறேன் என்று சொல்வது ...., இந்நூலில் வரும் சிறுவர் சிறுமியரை காணும் போது இவர்களை சுயநலம் உடையவர்களாகவும் வெறுப்பு கொண்டவர்களாகவும் மாற்றும் நம் சமூகசூழல் மீது கோபம் வருகிறது .
   இச்சிறுகதை தொகுப்பில் மூன்று பாட்டிகள் வருகின்றனர் ,இம்மூவரில் அக்குபாரி கிழவியின் அட்டகாசங்கள் என்ற கதையில் வரும் கிழவி படு சுவாரஸ்யமானவள். தன் மருமகளினை நோகடிக்க தன் படுக்கையிலேயே தன் கழிவினை வெளியேற்றி அசிங்கம் செய்கிறாள் ஆடை களைந்து தெருவிற்கு வருகிறாள் தனக்கு உணவு தரப்பட்ட தட்டினை கொண்டு போய் கழிவறையில் போடுகிறாள் தன் மகன் வீட்டில் புத்திபேதளித்தவளாக காட்டி கொள்கிறாள் ,தன்னிடம் இருக்கும் குதிரை வடிவம் கொண்ட டாலரை தன் மகன் வழிபேரன் கேட்கும் போது தருவதாக கூறி அவனை ஏமாற்றுகிறாள்,ஆனால் தன் மகள் தன்னை காண வரும் போது ரகசியமாக தான் ஊரில் வட்டிக்கு விட்ட பணம் வசூல் ஆகியதா என கேட்கிறாள் தன் தோடினை அவள் மகளிடம் தர சொல்கிறாள் அந்த குதிரை டாலரையும் அவள் மகனுக்கு கொடுத்தனுப்புகிறாள்,இதை கவனிக்கும் குதிரை மீது செல்வது போல அன்றாடம் கனவு காணும் கிழவியின் மகன் வழி பேரன் தனக்கு குதிரை டாலர் கிடைக்காததால் சோகமுடன் நிற்பதாக கதை முடியும் .
    தீராக்குறை சிறுகதை, தன் மேல் பாசம் கொண்டு தன்னை காண வந்திருக்கும்  தங்கை மகனிடம் தானும் தன் தங்கைகளும் இளமையில் வாழ்ந்த வாழ்வினையும் இப்போது மகன்கள் தங்களை நிற்கதியாக்கி விட்டுவிட்டதையும் சொல்லி புலம்புவதாக அமைந்த கதை . சோகம் நிறைந்த இந்த கதையில் நெகிழ வைக்கும் இடங்களும் உண்டு .காமராஜர் மதிய உணவு திட்டத்திற்கு தன் அப்பா வீடுகளில் இந்த திட்டத்திற்காக சேகரிக்க படும் தினம் ஒரு கைபிடி அரிசிசேர்க்கையை பற்றிய விவரணையும், மேலும் மிக நெகிழ்வான ஒரு இடம் , தன் அம்மா யாரிடமும் சொல்லாமல் இலவச கண்அறுவை சிகிச்சைக்கு சென்றதை அறியாமல் இரவெல்லாம் எல்லா  இடங்களிலும் தேடி மருத்துவமனையில் கண்ட பின்பு அம்மாவும் மகனும் ஒருவரை ஒருவர் கண்டு அழும் இடம் ,இதில் அம்மாவை தேடும் போது அவன் கிணறுகளை எல்லாம் வந்து பார்க்கும் இடம் நெஞ்சை பதற வைக்கின்றன,அதே சமயம் அம்மாவை வைத அவன் தம்பி அம்மாவை தேட கூட முயற்சிக்காமல் தூங்க சென்று விடுகிறான் .   
    தாய்மை என்ற சிறுகதை தன் மகன்கள் தன் மகள் வழி பேத்திக்கு திருமணத்திற்கு நகை செய்வதாக வாக்களித்து நிலத்தை வாங்கி நேரம் வந்த போது கைவிரித்ததால் அல்லல் படும் ஒரு மூதாட்டியின் கதை,மகன்களின் துரோகத்தால் மனம் வெதும்பி அவர்களுக்கு துன்பம் வர அவர்கள் நகை கொண்டு வந்து கொடுக்க வேண்டினால் உடனே தாக்கும் நாட்ராயன் கோவிலுக்கு செல்லும் நிலைக்கே வந்து விடுகிறாள், அவள் கோவிலுக்கு செல்லும் போது முன்பு பசுமையாக கிடந்த தன் நிலம்  மழை பொய்த்து  நீர் இல்லாமல் வறண்ட நிலமாக இருப்பதை கண்டு மனம் உடைக்கிறாள் ,முன்பு ஊரில் முதன் முதலாக காரைவீடு கட்டியதும் (அவள் பெயரே கதையில் காரைவீடுக்காரிதான்) தன் கணவனுடம் இந்த நிலத்தில் சந்தோசமாக பயிரிட்டதும் ஞாபகம் வருகிறது. பிறகு கோவிலுக்கு சென்ற போது பூசாரியிடம் அவள் வேண்டுதலாக சொன்னது "சாமீ.. ரொம்ப வறுமை சாமி ,மழை பெய்யணும்,பிள்ளைக,பேரன்க, ஊர் எல்லாம்  செழிப்பாகனும்  சாமீ'' என்றுதான்  .

குதிரை மசால் தாத்தா எனும் சிறுகதை ஊர் ஊராக சென்று மாடுகளுக்கு வைத்தியம் பார்க்கும் ஒரு முதியவரை பற்றி பேசும் கதை. இந்த தொகுபிநிலேயே விரிவான சித்திரங்களுடன் மிகுந்த வாஞ்சையோடு படைக்க பட்ட பாத்திரம் இதுதான் .அவர் ஊருக்கு வர தொடங்கியதும் சிறார்கள் அனைவரும் அவரை தேடி ஓடி வருகின்றன ,அவரிடம் நலம் விசாரிகின்றன,அவரும் தன்னிடமுள்ள வேர்குச்சியை கொண்டும் நீரை நிறம் மாற வைக்கும் கல்லை கொண்டும் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுகிறார் .பெரியவர் தன்னிடமுள்ள குச்சியை மாயாஜால குச்சியாக மலையை நகர்த்தும் வலிமை கொண்ட குச்சியாக குழந்தைகளை நம்ப வைக்கிறார் ,குழந்தைகள் காட்ட சொன்ன போது அது சித்ரா பவ்ர்ணமி அன்றே குச்சி அந்த சக்தி பெரும் என்று வேடிக்கையாக சொல்கிறார்.கதையில் அவருக்கு 90 வயது இருக்கும் ,அவரது மகன்கள் அவரை கவனிக்காமல் கைவிட்டுவிட்டனர் ஆனால் அவர் தொழில் அவரை கைவிட வில்லை ,தொழிலுக்காக அலையும் ஊர்களில் அங்கிருக்கும் குழந்தைகளோடு பழகி வாழ்வினை சுவாரஸ்யமாக வைத்திருக்கிறார் .குழந்தைகள் அவர் மேல் இருக்கும் வசீகரத்தில் அவரை போல் நடந்து மகிழ்கின்றன ,அவருக்கு உணவு தர போட்டிபோடுகின்றன . இந்த கதை படித்த பிறகு என் மனதில் தோன்றியது இவர் எப்போது நடக்க இயலாமல் நின்று விடுவாரோ அப்போது இறந்து விடுவார் என்று. நானும் வாழ்ந்தால் இவர் போல் சொந்த காலிலேயேவாழ்ந்து இறந்து விடவேண்டும் என்று நினைத்தேன்
இக்கதை தொகுப்பில் போது பிரச்சனைகளை பேசும் இரண்டு கதைகள் உயிர்ச்சுனை,பூமிக்குள் ஓடுகிறது நதி. உயிர்ச்சுனை, நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள், குளிர்பான நிறுவனங்களும் நீராதாரமான ஆற்றின் மணலை கொள்ளையடிப்பவர்களும் பணம் அதிகம் கொண்ட விவசாயிகள் மின் மோட்டார் மூலம் தேவைக்கு அதிகமான நீரை வெளியேற்றி வீண் செய்வதாலும் பாதிக்க படுவதை சொல்லும் கதை. இது உண்மையில் கத்தியின் மேல் இருந்து எழுதுவதை போன்றதுதான் கொஞ்சம் பிசகினாலும் பிரசாரம் ஆகிவிடும் ,ஆனால் இக்கதை ஒரு கந்தப்பர் எனும் எளிய விவசாயி தன் கிணறு நீர் கீழிறங்கி விட்டதால் தன் திருமணமான மூத்த மகளிடம் கடன் பெற்று போர் போடுகிறார் ,இந்த நீர் வந்துதான் விவசாம் செய்து தன் இரண்டாவது மகளை கரையேற்ற வேண்டும் சூழ்நிலை,மேலும் மகள் சிறுக சிறுக சேர்த்துவைத்த பணத்தை கணவருக்கு தெரியாமல் தருகிறாள் ,அதை அவளுக்கு திருப்பி தர வேண்டும் ,முன்பு அவர் கிணறில் நீர் எப்போது ஊறி கிடக்கும் ,இவர் ஊரில் வந்த கொக்ககோலா நிறுவனத்தால் அந்த ஊரில் உள்ள கிணறு அனைத்திலும் நீர் கீழிறங்கி விட்டது ,மேலும் மழை வந்தால் ஆற்றில் நீர் நிறையும் போது கிணறும் நிரம்பி விடும் ஆனால் ஆற்று மணலை பிடுங்கி ஆற்றினை காலியாக்கி விட்டார்கள் .  இக்கதையை சுவராஸ்யமாகுவது நிதின் என்ற கந்தப்பரின் பேரன்தான். கதையின் முடிவில் போர் போட்டு நீர் பொங்கி வரும் ,அனைவரும் மகிழ்வார்கள் ,போர் வண்டி சென்று விடும்.  ஆனால் நீர் வந்த பத்தாவது நிமிடத்தில் மோட்டார் திணறி நீர் வருவது நின்று விடும் .
          இன்னொரு கதை பூமிக்குள் ஓடும் நதி , சாதிகளுகிடையே நல்லிணக்கத்திற்காக இருக்கும் சடங்குகளை சாதி வெறி கொண்ட ஆடவர்கள் புறகணிக்க சாதிபாகுபாடு அற்றவர்களும் பெண்களும் அந்த சடங்குகளை வெளிபடையாக செய்ய இயலாமல் மறைவாக செய்து கொள்வதை பேசும் கதை , விருமாண்டி என்ற பாத்திரம் தன் மகள் வழி பேத்திக்காக செய்ய வேண்டி சடங்கிற்கு தான் இளவயதில் காதலித்து திருமணம் செய்ய முடியாமல் போகும் சுப்பமாளிடம் செல்வதும் அவள் வந்து உதவுதும் என்று கதை போகும் .
  இக்கதைகளில் என்னை மிக வசீகரிப்பது இதில் வரும் பெண்கள்தான் .அதிலும் கிடந்த கோலம் கதையில் வரும் வனிதா, இவளிடம் கதையின் முடிவில் ஏற்படும் அடக்கமுடியாத சிரிப்பினை பற்றி அறிய அந்த கதை முழுவதும் வீடு வேலைகளில் அவள் படும் கஷ்டங்களை காண வேண்டும் . தன் மனைவியை ஏவலாளியாகவும் தேவைக்கு சுகம் தருபவளாகவும் வைத்திருக்கும் ஒரு ஆடவன் இந்த கதையை வாசிக்கும் போது இந்த சிரிப்பு அவனை நொறுங்கி விழ செய்துவிடும் .
    மற்ற பெண்கள் முக்கியமாக வரும் இரண்டு கதைகளும் துயரங்களை எப்போதும் தன் தோளில் சுமந்திருக்கும் பெண்களை பற்றிய கதை. வெண்ணிலை நகரத்திற்கு குடிபெயர்ந்த சிலநாட்களில் தன் தந்தை மருத்துவமனையில் இறந்து விட அவரை வீட்டிற்கு கூட கொண்டுசெல்ல பணமில்லாமல் தெருவில்நின்று யாரவாது தெரிந்தவர்கள் வருகிறார்களா என்று தவிப்புடன் பார்த்து நிற்கும் ஒரு பெண்ணின் கதை . இன்னொன்று ஒருதுளி துயரம் என்ற சிறுகதை,இக்கதையின் துவக்கவரி  ஒரு பெரியவர் தன் மகளை செத்து போ செத்து போ என்று சொல்லி கொண்டே வருவது ,முடிவு வரி அப்படி சொல்லாதப்பா மனசுக்கு கஷ்டமா இருக்கு என்பாள். ஒருகால் ஊனமுற்ற ஒரு பெண்ணை அவளது ஊனத்தையும் அவளது ஒரு அழகாக நினைக்கும் கணவனை தான் திருமணம் புரிந்த ஏழு நாட்களில் இழக்கிறாள்,தன் கணவனுக்கு துரோகம் செய்தவனை, கணவன் தர வேண்டிய மீதி பணத்தினை சேர்த்து வைத்து அவனிடம் கொடுக்க செல்லும் போது அவன் வருந்துவான் என நினைக்கிறாள் ,ஆனால் அப்போதும் அவளுக்கு தோல்விதான்.
மெய் பொருள் காண்பது அறிவு கதை , ஹாஸ்டலில் தங்கி படிக்கும் தன் மகனை அடிக்கடி சென்று காண இயலாத வேலை சூழலும் வசதியும் அற்ற ஒருவனை அவன் மகன் புரிந்து கொள்ளும் கதை .இந்த கதை வாசித்த பின்பு கண் கலங்கினேன் .இன்னொரு கதை வாழும்கலை, வேலைக்கு செல்லாததால் துளி கூட மதிக்காத தன் மனைவி மதிப்பதில்லை ,ஒரு கட்டத்தில் தனக்கு கடினமாக இருக்கிறது என விட்டு விட்ட வேலைக்கே திரும்ப போய் வேலை போய் விடுவான். அவனுக்கு அந்த பகுதியில் வந்த சாமியாரிடம் வாழும் கலை கற்க பணமில்லை ,ஆனால் அவனது வாழ்பனுபவமே அவனுக்கு வாழும் கலையை கற்றுத்தந்து விடுகிறது .
       கூருகெட்டவன் கெட்டவன் கதை , இக்கதை ஊரில் ஒரு மாடாக வேலை செய்யும் தந்திரமற்ற ஒரு அப்பாவியை கூருகெட்டவன் என்கிறது ,ஆனால் உண்மையில்  கூருகெட்டதனம் செய்து அதை மறைவாக வைத்து கொண்டு அலையும் ஒருவனை உலகம் நல்லபடியாக பேசுகிறது . இதை தன் கணவன் மூலமே இதில் வரும் பெண் பாத்திரம் உணர்கிறாள் ,தனக்கு கீழ்த்தரமான துரோகம் செய்தவனின் மனைவிக்கு கூட வந்து கூறு கெட்டவன் என்று பேசப்படும் உடையாளை பாத்திரம் உதவி செய்யும் .
       இந்த சிறுகதை தொகுப்பினில் இரண்டு அசலான சிறுவர் உலகம் மட்டுமேயான கதைகள் உள்ளன .ஒன்று புற்று இன்னொன்று நிருபணம். புற்று நாய் வளர்க்க விரும்பிய ஒரு சிறுமி தெருநாயின் ஒரு குட்டியை தாய்நாய்க்கு  தெரியாமல் கொண்டு வந்து விடுகிறாள் ,அவளது மாமா அந்த குட்டி பெண் நாய் என்று வெளியே விட்டு விட கொண்டு செல்ல அது தடுக்க இயலாமல் அதை விடுவதையாவது பார்க்க வேண்டுமென்று கூட செல்கிறாள் ,காரில் ஓடும் போதே நாய் வெளியே வீசப்படுவதையும் அது கார் பின்பு ஓடி வருவதையும் பார்க்கிறாள் .இவளின் சிறுவயதில் தான் பார்த்த அம்மாவிடம் பகிராத ஒரு நிகழ்வும்(அது இவளது தங்கையை இவள் அம்மா இல்லாத போது கடத்தி சென்று விடும் நிகழ்வு ) சேர்ந்து அவளை பயமுறுத்துகிறது .அவள் தன் அம்மாவிடம் தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டி அழுகிறாள் . இன்னொரு கதை நிரூபணம்,இந்த கதை எனக்கு மிக பிடித்த கதைகளில் ஒன்று ,நடைமுறையில் கிருத்துவம் எவ்வளவு தூரம் கிறிஸ்துவிடம் இருந்து விலகிவிட்டதையும் ,ஒரு சிறுவன் இதையெல்லாம் விட்டு தன் குழந்தை மனதால் தன் செயலால் கிறிஸ்து சொல்லும் குணத்தினை தன் இயைல்பிலேயே பெற்றிருக்கிறான் என்பதையும் சொல்லும் கதை இது .
      எனது இந்த நூல் பற்றிய அனுபவங்கள், இந்த தொகுப்பினை குறைகளே இல்லாத அற்புதமான கதைகள் என்று பறை சாற்ற எழுத படவில்லை.ஆனால் இந்த அளவு சிறந்த கதை கொண்ட இந்த தொகுப்பு அதற்கான அங்கீகாரம் பெற வேண்டும் என்று விரும்பியே எழுதினேன். என் குழந்தை தனமான இந்த முயற்சி சிறு அளவில் பயன் பெற்றால் கூட போதும் மிக மகிழ்வேன் .